நம் தமிழ் நாட்டு வரலாறு காட்டும் வழி :
I. இது ஒரு பொற்காலம் ?
பொற்காலமா ? என்ன எது ? கொஞ்சம் அதிகமாய்ப் படவில்லை ? இன மற்றும் பண்பாட்டு எதிரிகள் இன்றும் அடாத தொடர் செயல் பல புரிந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே இப்படியும் ஒரு கருத்தை சொல்லவே துணிச்சல் தேவைப் படுகிறது ! உங்களுக்கே கூட இந்த ஐயம் எழலாம் யார் கண்டது ? இன்றைய நமது சூழலே உங்களை அவ்வாறு சிந்திக்க வைக்கிறது ! தப்பில்லை ! தவறும் ஏதும் இல்லை ! ஆயின், ஏதோ புதிதாக சொல்லவருகிறானே, என்னதான் சொல்கிறேன் கேட்டுத்தான் பாருங்களேன் ! காசா? பணமா? உங்களை செவி மடுக்க மட்டுமே கேட்டுக்கொள்கிறேன்! முடிவினை உங்களிடமே விடுகிறேன்
ஆ). தமிழ் நாட்டு வரலாறு ஏற்படுத்திய மாற்றமா ?
நம் தமிழ் நாட்டு வரலாறு எனக்கு உரைத்ததையே நானும் வழி மொழிகிறேன் ! தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசனார் எழுதிய “தமிழ் நாட்டு வரலாறு” என்ற நூலை ஆங்கில மொழி மாற்றம் செய்திடக் கிடைத்த வாய்ப்பு, பலப் பல தமிழ்நாட்டு வரலாற்று உண்மைகளைக் எனக்குரைத்தது ! எனவே வரலாற்று ஆதாரங்களுடனே கடந்த கால, சமகால ஒப்பாய்வுகளும், தமிழ்ச் செம்மொழி மாந்தர் விட்டுச் சென்ற பணிகளும், மொழிசார் மக்கள் (அரசியல் உள்ளிட்ட) இயக்கங்களும் தமிழ் நாட்டு வரலாற்றைப் புரட்டிப் போட்டன.
II . தாய்த் தமிழின், தமிழினத்தின் வீழ்ச்சியின் துவக்கம் :
௧ . 3 -ஆம் நூற்றாண்டின் தமிழ் முற்றழிப்புத் தோல்வி :
தமிழ் நாட்டின் இருண்ட காலமான களப்பிரர் ஆட்சியில் ( கி.பி. 200 - ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 575 -ஆம் ஆண்டு வரை ) முன்னூறு ஆண்டுகள் நம் தமிழர் அரசியலமைப்பு,பண்பாடு , இலக்கியம், மொழி, பிற வரலாற்று நிகழ்வுகள் முதலியன முற்றிலுமாக கொடும் வன்முறை ஆட்சியால் அழிக்கப்பட்டன. தமிழ், தமிழர், அவர்தம் வரலாறு அங்க அடையாளம் தெரியாமல் பூண்டோடு அழித்து ஒழிக்க திட்டமிட்டு அக்காலத்தே யார் ஆண்டார்கள் என்ற செய்தி கூட மறைக்கப்பட்டது. தமிழுக்கு பதிலாக பிராகிருதம் , பாலி மொழிகள் திணிக்கப்பட்டன. சமண இலக்கியங்களில் ஆங்காங்கே குறிப்புக்கள் உள்ளதைத் தவிர தன்னைப்பற்றியும் அந்த தமிழ் எதிரிகள் (களப்பிரர்) வெளியிடவில்லை .
(பக்.161 - தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )
௨ . பின் எவ்வாறு தமிழ் இன்றளவும் வாழ்கிறது ?
• தாய்த் தமிழின் வலிமையையும், சிவ வழிபாடும், ஊழ்வினை மேல் நம்பிக்கையும் களப்பிரர் பால் தமிழருக்கு தீராப்பகை ஏற்ப்படுத்தியது. களப்பிரர்கள், காஞ்சியிலிருந்து 6 -7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவன் சிம்ம விஷ்ணு முதல், நரசிம்மவர்மன் வரையும், 7 - 8 - ஆம் நூற்றாண்டுகளின் மேலசாளுக்கியன் முதலாம் விக்ரமாதித்யன் முதலியோரும் , தெற்கிலிருந்து பாண்டியன் கடுங்கோன் ஆகியவர்களாலும் அழிக்கப்பட்டார்கள்.
(பக்.160 தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )
lll .தாய்த் தமிழின் எழுச்சி காண்போம்:
"என்ன துணிவு உனக்கு ? மேலே கூறியவை நீதானா ? " என நீங்கள் கேட்பது எனது காதுகளிலும் ஒலிக்கிறது ! இன்றைய தமிழின் நிலை, அடுத்த தலைமுறையினரின் குறைந்த தமிழார்வம், காரணிகளும் நாமே, என்று உணர்ந்தவுடன் வந்துதித்த சிந்தனையின் வெளிப்பாடே “தாய்த் தமிழின் எழுச்சி காண்போம்” ஆகும்! தமிழ்க் கடலாம் மறைமலை அடிகளின் தனித் தமிழ் இயக்கம், மற்றும் அதே போன்று பலப் பல செந்தமிழ்ச் செம்மல்களின் அடியொற்றி உருவான அதே சூழல்தான் இன்றும் ! ஆனால் வட மொழியின் தாக்கம் அன்று ! இன்றோ ஆங்கில வழிக்கல்வியின் விளைவைக் கண்ணுறுகிறோம் !
இ). தமிழருடன் மோதிய தமிழரின் இழிநிலை :
வரலாற்றாய்வின் படி குறுநில, பெருநில மன்னர்களும், சோழ, சேர பாண்டியர் போல ஒருவருக் கொருவர் அடித்துக்கொண்டுதான் கிடந்தார்கள் ! தமிழர் ஒருவரை ஒருவர் போர்க்களத்தில் சந்தித்த காலமும் போய், போர் ! போர் ! எனவும் முழங்கி அப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்தும், இல்லையெனில் அடுத்த போருக்குத் தன்னை தயார் செய்வதிலும் , போரை ஒட்டிய அழிவுகளையும், போர்க் குற்றங்களையுமே இடைப்பட்டக் காலத்தில் கண்டு வந்தது தமிழ் நாடு ! இதில் வெளிப் பகையால் நடந்த போர்களும் அடக்கம். இக்கட்டுரையில் வேறிடத்தில் நான் உரைத்தவாறு தமிழனே தன்னுணர்வு இல்லாது, தான் எவ்வாறு 1800- ஆண்டுகட்கு மேல் அடிமையாய்க் கிடந்தான் என்ற வராலாற்று உண்மையும் உணராமலே, நாம் நம்மை அறிந்து கொள்ளாமலே வாழும் இக்காலமே, இவ்வளவு குறைகள் உள்ள , நாம் வாழும் காலமே, பொற்காலம் என போற்ற வேண்டிய நிலையில், கட்டாயத்தில் உள்ளோம் என உணரத் தலைப் படுவோம் ! முயன்றாலும் தவறு ஒன்று மில்லையே ! முயன்றுதான் பாருங்களேன் !
ஈ). பிரிந்து கிடந்த தமிழர்:
இந்தியத் திருநாட்டின் தன்னுரிமைப் பெறும் காலம் வரை, அடிமைப்பட்டும், சிறு சிறு குறு நில மன்னர் ஆளும் பகுதிளாகவுமே நம் தமிழ் நாடும் விளங்கி வந்தது மற்றைப் பகுதிகள் போல!
உ). ஒன்றுபட்ட தமிழ்நாடு ஒரு பொற்காலமே !
புவியியல் படியும் 64-ஆண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியாகவே தமிழ் நாடும் மக்களும் வாழ்ந்தும் வருகிறோம் ! சேரநாடு மொழிக்கலப்பால் அழிந்தும் மலையாள மொழி பிறந்ததும் வரலாற்று உண்மைதானே ! ஒரே ஒரு வேறுபாடு ! இன்றோ தமிழருக்குள் போரில்லை ! வெளிப் படையெடுப்பும் இல்லை ! ஓரளவிற்கு தமிழும் அரசு உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டு மொழியாகவும் ஆயிற்றே ! இதற்கு முன்னர் இந்தச் சூழல் இருந்ததா? என உங்களையே கேட்டுப் பாருங்களேன் ! விடையும் கிடைக்கும் ஏற்றமும் முன்னேற்றமும் எல்லாவகையிலும் இக்காலத்தேதான் என்பதும் தெரிய வரும்! ஒரு வகையில் தமிழ் நாட்டின் பொற்காலம் என்பதும் புரியவும் வரும் !
மேலும் வளரும்...........
மேலும் வளரும்...........
No comments:
Post a Comment